நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை பாதுகாப்பதற்கும் செலவுகளை குறைக்கும் முயற்சியாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்காக மேலதிக செலவுகளை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு அறிவித்துள்ளது.
ராஜதந்திர தூதுக்குழுவின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவ கொடுப்பனவு வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த 12 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொழம்பகே வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார்.
பிரதிநிதித்துவ கொடுப்பனவாக தூதரகங்களில் பிரதானிகளுக்கு 700 முதல் 3 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. ஏனைய தர அதிகாரிகளுக்கு 200 முதல் 400 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகிறது.
இந்த கொடுப்பனவுகள் அனைத்து நாடுகளுடனான ஆட்சியாளர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தவும் இலங்கையின் சுற்றுலா, வர்த்தகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளை கையாளும் விடயங்களை மேம்படுத்துதல் மற்றும் ராஜதந்திர கூட்டங்களில் உத்தியோகபூர்வ பரிசுகளை வழங்குவதற்காக கொடுக்கப்படுகின்றன.
தூதரகங்களின் பிரதானிகள், விசேட பிரதிநிதிகள், நிரந்தர பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதான அதிகாரிகள், ஏனைய தர ராஜதந்திர அதிகாரிகள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து நாடுகளும் உள்ள இலங்கையின் தூதரகங்களின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டு வந்துள்ளது.