நாற்காலி சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மீண்டும் உயிரூட்டும் திட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் தலைமையில் வேறு கட்சியை இணைத்து கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரை தவிர அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும், பொதுஜன ஐக்கிய முன்னணியை மீளமைக்கும் பணியில் இணைந்துள்ளனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளார்.
இது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, குமார வெல்கமவுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்குள் வருவதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுய சரிதை நூல் வெளியீட்டு நடவடிக்கையின் பின்னணியில் இருக்கும் நோக்கம் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கம் செய்ய போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் குறிப்பிட்டிருந்தது.