மலையக ஊடகவியலாளரான கிருஸ்ணசாமி ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் MediaInc திட்டத்தில் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னணி ஒளி,ஒலிபரப்பு நிறுவனங்களில் பல சிரேஸ்ட பதவிகளை வகித்துள்ள கிருஸ்ணசாமி ஹரேந்திரன், பி.பி.சீ போன்ற உலகின் முதனிலை செய்தி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார்.
சமூகம் சார்பான கரிசனையை அதிகளவில் வெளிப்படுத்தும் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் பல்வேறு மக்கள் போராட்டங்களில் இன்றியமையா ஊடகப் பங்களிப்பினை களத்திலிருந்து வழங்கியுள்ளார்.
உளவள ஆலோசகர், செய்தியாளர், செய்தி ஆசிரியர், தொகுப்பாளர் சர்வதேச செய்தி சேவை நிறுவனங்களின் இலங்கை செய்தியாளர், தன்னார்வ தொண்டர், யோகா ஆசிரியர், புலனாய்வுச் செய்தியாளர், சமூக செயற்பாட்டாளர் என பல்வேறு பரிமாணங்களில் தனது மண்ணுக்கும், மக்களுக்கும் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் வழங்கி வரும் சேவை மென்மேலும் பல்கிப்பெருக வேண்டுமென எமது நியூஸ் தமிழ் இணைய ஊடகவலையமைப்பின் சார்பில் வாழ்த்துவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம்.