கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில், கடந்த முதலாம் திகதி இரவு ஆயுதத்தால் தாக்கப்பட்டு 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் ,மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி பரந்தன் வர்த்தகர்கள் நேற்றைய தினம் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முற்பகல் 10 மணியளவில் குறித்த இளைஞனின் வீட்டில் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து, அவரின் சடலம் தாங்கிய சவப்பெட்டியுடன் பரந்தன் சந்திவரை பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர், குறித்த பகுதியில் ஏ-9 வீதியை இடைமறித்து, இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் எனப் பலரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், போராட்டத்தில்
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலுமொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் சந்தியில் பொலிஸ்துறை காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்துவதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
சுமார் 30 நிமிடங்கள் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்திலிருந்து கலைந்துசென்று, கோரக்கண்கட்டு பொது மயானத்தில், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியையில் கலந்து கொண்டுள்ளனர்.