நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து, அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த விடயத்தில், அரசாங்கத் தரப்புக்குள் இணக்கப்பாடு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடு தற்போது டொலர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நிலையில், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.