எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இதன்போது, பெரும்பாலும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து சங்கங்களுக்கு இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 14 ரூபாவாக காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
அத்துடன் ஏனைய பேருந்து கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்திருந்த யோசனைகள் ஊடாக கோரியிருந்தன.
எவ்வாறாயினும், 7.5 முதல் 10 சதவீத்திற்கு உட்பட்ட பேருந்து கட்டண அதிகரிப்பை வழங்கவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி அதன் முதற்கட்ட செயற்திட்டம் தெஹிவளை முதல் பத்தரமுல்லை வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, குறித்த பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம் பயணிகள் அழைத்து செல்லப்படுவதுடன் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பேருந்துக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் முன்பக்க கதவிலே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நுழைவு பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைக்கான இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.