கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி மத்திய கல்லூரியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் குத்துச்சண்டை, கெரம், செஸ் ஆகிய விளையாட்டுக்களை கல்லூரி நிருவாகமும் விளையாட்டுத்துறை பிரிவும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லூரியின் 82 பழைய மாணவர் குழுவும் லைட் போர் லைவ் (வாழ்க்கைக்கு ஒளி) அமைப்பும் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது.
40 வருடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு இடையில் ஸ்டப்ஸ் கேடயம், ரி.பி. ஜாயா கிண்ணம் ஆகிய குத்துச் சண்டைப் போட்டிகளில் சம்பியனான ஹமீத் அல் ஹுசைய்னி கல்லூரியில் குத்துச் சண்டை விளையாட்டு 1982க்குப் பின்னர் கைவிடப்பட்டது.
இப்போது மீண்டும் குத்துச்சண்டை விளையாட்டை கல்லூரியில் அறிமுகப்படுத்தும் வகையில் 82 பழைய மாணவர் குழு, லைட் போர் லைவ் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையில் 2 மில்லியன் ரூபா செலவில் மினி குத்துச்சண்டை கோதா அமைக்கப்பட்டு வைபவரீதியாக நேற்று வியாழக்கிழமை திறந்தவைக்கப்பட்டது.
அத்துடன் கெரம் அரங்கமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.கல்லூரி அதிபர் ஏ. ரி. அதானின் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் லைட் போர் லைவ் பணிப்பாளர்களான இஸட். ஏ. எம். ஸெய்னுடீன், பாஸில் புஹாரி, இம்தியாஸ் பாறூக் ஆகியொரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை, குத்துச்சண்டை அரங்கம் திறந்துவைக்கப்பட்ட பின்னர் மாணவர்களின் கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. குத்துச்சண்டை பயிற்றுநராக 1970களில் பிற்பகுதியில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் அதிசிறந்த பாடசாலை குத்துச்சண்டை வீரர் விருதுகளை வென்றெடுத்த எம். எஸ். எம். இம்தியாஸ் செயற்படுகின்றார்.
படங்கள். எம்.நசார்