கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கவென ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்திவருகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில் அமைச்சர்கள் மூவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், அரசு இந்த அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் தாக்கல்செய்துள்ள சத்தியக்கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில்சட்ட மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.