உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிப்பதற்காக பொட்டாசியம், பொஸ்பேட் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய சேதன உர வகையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக நேற்று (14) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பேராசிரியை நிர்மலா கோட்டேகொட, பொஸ்பேட் உரங்களின் பெறுமதியைக் கூட்டி தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய உரக் கலவையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோளப்பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவித்தார்.
மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களுக்கான இந்தப் புதிய உர வகையை ஈடுபடுத்துவது தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது வெற்றியடையும் பட்சத்தில், நாட்டில் இயற்கை விவசாயத்திற்குத் தேவையான முழுமையான உயர் தரத்திலான உரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.