திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அனர்த்தம் இடம்பெற உடந்தையாக இருந்தார் எனத் தெரிவித்தும் கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஏலவே, கைதான குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட அறுவர் அதே தினத்தில் பலியாகினர்.
அதேநேரம், மிதப்பு பால விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் அண்மையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.