கம்பளை நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இருவரில் தாயின் சடலம் மகாவலி கங்கையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதெனவும் மேலும் இரண்டரைவயதுப் பெண் குழந்தையினை தேடும் பணிகள் தொடர்ந்து இடம் பெற்றுவருவதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
கண்டி பூரணவத்தையைச் சேர்ந்த ஒரே குடும்ப அங்கத்தவர்களான ஐந்து பேரடங்கிய குழுவினர் சம்பவதினமான கடந்த 5 ஆம் திகதி கம்பளை நில்லம்ப ஒயாவில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நில்லம்ப நீர் மின்திட்ட அணைக்கட்டின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டதாகக் கூறப்படுகிறது
இதன் போது அங்கு திடீரென நீர் பெருக்கெடுத்தமையால் நீராடிய ஐவரும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் . இதன் போது பிரதேச வாசிகளால் மூன்று பேர் காப்பாற்றப்பட்டு கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுதும் அதில் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய எம்.ரஸ்பான் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் மேலும் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த 20 வயதுடைய அஸ்பா என்ற இளந்தாயும் அவரின் இரண்டரை வயது ஆலியா என்ற மகளையும் கடற்படை சுழியோடிகள் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளும் இணைந்து தேடிவந்த நிலையில் 08.11.2021 அன்று பகல் பேராதனை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் குழந்தையினை தேடும் பணிகளை மேற்குறிப்பிட்ட தரப்பினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை காணாமல் போனவர்களை கடந்த 7ஆம் திகதியும் நீருக்குள் தேடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் திடீரென நீர்மட்டம் அதிகரித்தமையால் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த உடகவியாலாளர் ஒருவரின் கெமரா உட்பட உபகரணங்கள் சேதமடைந்துள்ளதுடன் அங்கு தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருந்திரளானோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்
மேலும் முன்னர் மேற்படி வான் கதவுகள் திறக்கப்படும் பொழுது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுவது வழக்கமெனவும் ஆனால் தற்பொழுது ஒலி எழுப்புவது நிறுத்தப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் ஆபத்துக்களை சந்தித்து வருவதாகவும் பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர் இது தொடர்பாக கம்பளை தொலுவ பிரதேச செயலாளருக்கு முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளனர் மேற்படி சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்களுடன் கருத்து கேட்பதற்கு தொலைபேசிவாயிலாக நாம் முயற்சித்த பொழுதும் அது கைகூடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது
செய்தி –நசார்-