அரசாங்கத்திடம் முறையான கொள்கை இல்லாமையினால் நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தாா்.
நாட்டில் டொலர் இருப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அரசாங்கத்துக்கு தரம் குறைவான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் ரத்கம தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட இவர், இவ்வாறு தரம் குறைவான பொருட்களை இறக்குமதி செய்வதால் எரிவாயு கலன்கள் வெடிப்புக்குள்ளாகுதல், தரம் குறைவான பொருட்களை கொள்வனவு செய்தல் போன்ற துரதிஷ்ட நிலையை சந்திக்க நேர்ந்தள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு இன்று சந்தித்துள்ள துரதிஷ்டமான நிலைமையிலிருந்து அரசாங்கத்தை கட்டியெழும்பி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தால் மாத்திரமே முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இன்று சகல வீடுகளிலும் மரண பயம் ஏற்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் என்ற பயத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இதுவொரு கவலைக்குரிய நிலைமையாகும்.
நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்ததும் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் வெடிப்பதில்லை. ஏனைய சகல துறைகளும் வீழ்ச்சியையே சந்திக்கும். நாட்டின் டொலர் இருப்பு வீழ்ச்சியை சந்தித்ததும் தரம் குறைந்த பொருட்களை கொள்வனவு செய்வது இயல்பான விடயமே.
இன்று எரிவாயு கொள்கலன்கள் தொடர்பிலும் அவ்வாறான நிலையே ஏற்பட்டுள்ளது. நாட்டில் மாத்திரமல்ல ஒவ்வொரு வீட்டிலும் கூட வருமானம் குறைந்ததும் விலைக் குறைந்த பொருட்களை கொள்வனவு செய்யவே மக்கள் முன்வருவார்கள்.
2002ஆம் ஆண்டு நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தபோது அப்போதிருந்த விலையை விட குறைந்த விலையில் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க ஒரு நிறவனம் காலி துறைமுகத்ததிலிருந்து வருகைத்தந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அந்த செயற்பாட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகா் எனது தோழராக இருந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நான் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டேன்.
ஆனால், தற்போது இலாப நோக்கில் ஒரு சில செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்புக்குள்ளாகின்றன. அதுமாத்திரமின்றி நாட்டின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மறுபுறம் மின்வெட்டும் இடம்பெறுகிறது.இதனால் மக்கள் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனா். இந்த மின்வெட்டு பாரதூர பிரச்சினையான உருவெடுத்துள்ளது. இந்த மின்வெட்டு எதற்காக இடம்பெறுகின்றது என்பது தொடர்பான காரணங்கள் இதுவரையில் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த மின்வெட்டு நடவடிக்கைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று மின்சார சபையின் பொறியியலாளா்கள் தெரிவிக்கின்றனா்.ஆனால், இது நாட்டில் பல்வேறு துறைகளையும் பாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.