டுபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை டுபாய் எக்ஸ்போ 2020 இல் சந்தித்து கலந்துரையாடினார்.
ஷேக் மக்தூம், கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்று, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 50 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வலியுறுத்தினார்.
கொவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கொவிட் பின்னணி பொருளாதாரத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் டுபாய் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கினார்.
இலங்கையின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல எக்ஸ்போ ஸ்டால் உதவும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அவர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரதிப் பிரதமரின் அழைப்பின் பேரில், எக்ஸ்போ 2020 கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
1083 ஏக்கர் பாலைவன நிலத்தில் நடைபெறும் “எக்ஸ்போ” கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன.
அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமான இக் கண்காட்சி மார்ச் 31 வரை வரை நடைபெற்று வருகிறது.
உலகெங்கிலும் இருந்து இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.