நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்தினூடாக நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு சட்டமா அதிபர் தரப்பால் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் இவ்வாறு இன்று உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.







