கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு இன்று (31) செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதைத் தடுக்க கோரிய அவர் இந்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது.
ஏற்கனவே, சோஹாரா புகாரியின் மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாக தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர் கெசட் அறிவித்தல் மூலம் வெளியிட்டிருந்தார்.
தற்போது, ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அதன் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.






