அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவின் உள்நாட்டுச் சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு அதே மட்டத்தில் இருந்தபோதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் ரஷ்யா அவ்வப்போது இத்தகைய ஏற்றுமதித் தடைகளை விதித்து வருகின்றது.
இது குறித்து ரஷ்ய பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் (Alexander Novak) தெரிவிக்கையில்:
“ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கான முறையான முன்மொழிவைத் தயாரிக்குமாறு எரிசக்தி அமைச்சிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.”
மேலும், நிலவும் போர்ச் சூழல் காரணமாக ரஷ்யாவின் எரிசக்தி உற்பத்திகளுக்கான உலகளாவிய கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






