தான் வயல், வரப்புகளில் செல்ல தெரியாத விவசாய அமைச்சர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தன்னிடம் நல்ல, நல்ல விடயங்கள் இருந்தாலும் அவற்றை தற்போது கூறபோவதில்லை எனவும் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை விட நான் வயல், வரப்புகளில் சென்றவன். எனது தந்தை ஒரு விவசாயி, நான் வயலில் வேலை செய்திருக்கின்றேன்.
வயலை உழுது இருக்கின்றேன். நாற்று நட்டு இருக்கின்றேன். எனது ஊரில் உள்ள எனது வயலில் நான் வேலை செய்தவன். எனக்கு வயல், வரப்புகளில் செல்ல தெரியும்.
ஆனால், நான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றி பேசினால், பதிலளிக்க கூடிய பலவிடயங்கள் இருக்கின்றன.
நாங்கள் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து மாளிகைகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. இதனால், கூற நிறைய இருக்கின்றன. எனினும் நான் கூற மாட்டேன்.
எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது எவரும் செய்யாத வகையில் மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து தனக்காக மாளிகையை உருவாக்கிக்கொண்டார் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.