நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம்20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.
இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள்.
இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும்.






