சர்ச்சைக்குரிய சேதனப் பசளை தொகையை விநியோகித்துள்ள சீனாவின் Qingdao Seawin Biotech Group Co Ltd நிறுவனம் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி டப்ளியூ.ஏ.ஆர்.ரி. விக்ரமாராச்சியிடம் 8 மில்லியன் டொலர் இழப்பீட்டை கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
நவம்பர் மாதம் 5 ஆம் திகதியில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த இழப்பீட்டு தொகையை செலுத்தவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சீன நிறுவனம் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
சீன நிறுவனம் தனது சட்டத்தரணியான எம்.ஜே.எஸ். பொன்சேகா ஊடாக இழப்பீட்டை கோரி, இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. சீன நிறுவனம் விநியோகித்த பசளை மாதிரிகளில் ‘Erwinia’ என்ற பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா இருப்பதாக கூறி, இலங்கை குறித்த சேதனப் பசளையை ஏற்றிய கப்பலை ஏற்க மறுத்ததை சீன நிறுவனம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
குறித்த நிறுவனம் சீனாவில் உள்ள மிகப் பெரிய நிறுவனம் என்பதுடன் முதல் தர சேதனப் பசளை உற்பத்தி நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் சேதனப் பசளைகள் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீன நிறுவனம் சேதனப் பசளைகளை தயாரிப்பதற்காக அமினோ அமிலம், ஹியூமிக் அமிலம், கடற் தாவரங்கள், மண் ஆகிய மூலப் பொருட்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளது.
அத்துடன் சேதனப் பசளைகள் 600 செல்சியஸ் வெப்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டு உலர்த்தப்படுவதாகவும் இதன் காரணமாக அனைத்து நுண்ணுயிர்களும் அழிந்து விடுவதாகவும் இதனால், குறித்த சேதனப் பசளைகள் பக்டீரியாக்கள் அற்றவை எனவும் சீன நிறுவனம் கூறியுள்ளது.