ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 20ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் அதன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.

இதன் போது 100ஆவது மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது. கல்வி முன்னேற்றம், டிஜிட்டல் மயப்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்ட இந்த முயற்சி பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு நேரடி ஆதரவாக அமைந்தது.

கடந்த 2024 ஜுன் மாதம் 07ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சமூகப் பணித்திட்டம் சுமார் 20 கட்டங்களாக வடிவமைக்கப்பட்டு இன்றுடன் 100 கணினிகளை வழங்கி வைத்து சிறப்புற்று நிற்கின்றது.
ஓவ்வொரு கட்டங்களிலும், கலைஞர்கள், மூத்த ஒலி-ஒளிபரப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சமூகத்தில் கல்வி கலாசாரம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றவர்களை பங்கேற்கச் செய்து வரும் இந்நிகழ்வில் இன்றைய தினம் சிரேஷ்ட ஒலி–ஒளிபரப்பாளர் உமர் லெப்பை யாக்கூப் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பிரபல இசை அமைப்பாளர் சுருதி பிரபா அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்கள்.
இதன் போது, பிரதம அதிதி சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் யாக்கூப் அவர்கள் உரையாற்றுகையில், சமூக சேவையில் மறக்கமுடியாத தடம் பதித்த கலாநிதி பதியுதீன் மஹமூத் மற்றும் எம். எச். எம். அஸ்ரப் ஆகியோரின் பணிப் பாரம்பரியத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புரவலர் ஹாஷிம் ஓமர் பார்க்கப்பட வேண்டியவர் எனக் குறிப்பிட்டார்.

“நான்கு சுவர்களுக்குள் இவ்வாறான ஒரு பெரிய சமூகப் பணித் திட்டத்தை அமைதியாக நடத்துவது, அவர்களின் வலிமையான மனப்பக்குவத்தையும் எளிமையையும் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வு ஒரு பெரிய அரங்கில் நடத்தப்பட்டு, அவருக்கான பாராட்டு சமூக ரீதியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். 100 மடிக்கணினிகளுக்கே சுமார் 2 கோடி ரூபா செலவாகியிருக்கும். இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாக செய்பவர்கள் மிகவும் அரிது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் “எனக்கும் ஹாஷிம் ஓமர் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு 40 ஆண்டுகளுக்கு மேலானது. அவர் சமூக சேவையில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு புதியதல்ல; நீண்டகாலப் பாரம்பரியம் கொண்டது” எனவும் நினைவுகூர்ந்தார்.
20வது கட்டமாக வழங்கப்பட்ட இந்த 100 மடிக்கணினிகள், மாணவர்களின் கல்வி பயணத்தில் தொழில்நுட்ப இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பவுண்டேஷன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரபல இசை அமைப்பாளர் சுருதி பிரபா, நிறுவன பணிப்பாளர் மரியம் ஹாஷிம் ஓமர், மேமன் கவி, தமிழன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஜவுபர், எழுத்தாளர் ராஜா மேத்தா, ஊடகத் துறை அமைச்சின் புலனாய்வு அதிகாரி ஜிப்றியா இப்ராஹிம், சுயதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் சார்ந்த ஊடகவியலாளர் அப்சரா ஜெயவரதன, தென்கிழக்கு பல்கலைக்கழக ஊடக இணைப்பாளர் அமீர், ஊடகவியலாளர் சந்திரிக்கா நிரோஷன், அமைப்பாளர் அர்க்கம் சுலைமான், ஷாம் பூஸ்டர் பணிப்பாளர் பஸ்னா, ரிகாஸ் ரேடர் உரிமையாளர் ரிகாஸா மஸாஹிர், ஊடகத்துறை அமைச்சின் அதிகாரி சந்திமா வித்தானகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தனியார் துறையின் சமூகப் பங்களிப்பு கல்வி, எதிர்கால தலைமுறையின் அறிவுத் திறன் வளர்ச்சிக்கான உறுதியான முதலீடாகவும் இது பார்க்கப்படுகிறது.






