பதுளை – சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண் மேடு ஒன்று மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதன் காரணமாக, அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இரண்டு மாடிக் கட்டிடம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வேறு கட்டிடங்களில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்திற்கு மேலதிகமாக, விளையாட்டு மைதானத்திற்குச் சொந்தமான ஒரு பகுதியிலும் மண் திட்டுக்கள் சரிந்து விழுந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், முறையான பாதுகாப்புச் சுவர் அமைத்து குறித்த மண் மேட்டை ஸ்திரப்படுத்தும் வரை, அதனை பிளாஸ்டிக் உறைகளால் மூடி வைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
அதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் மனோகரி பொன்சேகா குறிப்பிட்டார்.
இந்தப் பாதுகாப்புச் சுவரை நிர்மாணிப்பதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, விரைவாக இப்பணிகளை முன்னெடுத்து மாணவர்களின் கல்விக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பெற்றோர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






