தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை 4.00 மணிக்கு விடுத்துள்ள எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பிற்கு அமைய வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வேகத்திலான கடும் காற்றாக அதிகரிக்கலாம்.
வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.






