அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது.
நகர்வு 1. ஏற்கனவே இருந்தது போன்று இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசித்தல்.
நகர்வு 2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையில் நிலப்பகுதிக்குள் நாளை இரவு அல்லது 10 ஆம் திகதி அதிகாலை பிரவேசித்தல்.
நகர்வு 1 இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் நான் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 12.01.2026 வரை மிக மிக கனமழையைப் பெறும் ( 04 நாள் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மி.மீ. இனை விட அதிகம்).
நகர்வு 2 இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் கனமான மழை வீழ்ச்சியைப் பெறும். ஆனால் கிழக்கு மாகாணம் எதிர்வரும் 13.01.2026 வரை 350 மி.மீ.இனை விட கூடுதலான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெறும்.
நகர்வு 2 இன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் என்பன 300 மி.மீ. இனை விட கூடுதலாக திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்.
ஆனால் நகர்வு ஒன்றினை விட நகர்வு 2 இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மீளவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நகர்வு 2 இன் மையப் பகுதியாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்கள் அமையும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளுக்கான அதி கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆனால் இந்த நிகழ்வின் நகர்வு பற்றிய இறுதி முடிவை நாளை காலையே தீர்மானிக்க முடியும்.
நகர்வு 2 உறுதியானால் மீளவும் மலையகத்தின் பல பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகவே இது தொடர்பாக மிக மிக முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.






