கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, கண்டி மாவட்ட செயலகத்தில் 5 இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதையடுத்து, கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விரைந்து செயற்பட்டு, சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இதற்காக, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு ஆகியவை வரவழைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் கூறியதுடன், சம்பவம் தொடர்பான தேடல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






