உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் பிறப்பை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர்.
காசாவில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக 2023 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக நத்தார் கொண்டாடப்படாத புனித பூமியான பெத்லகேமில், இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த 14-ம் லியோ பாப்பரசரின் பதவியேற்புக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது நத்தார் நள்ளிரவுத் திருப்பலி, ரோமில் உள்ள வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. இதில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பிரதான நத்தார் நள்ளிரவுத் திருப்பலி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் உஸ்வெட்டகெய்யாவ புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, “சமூகத்தைத் தூய்மைப்படுத்த வேண்டுமாயின் மனிதர்களிடம் உள்ள பேராசையை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.






