பண்டிகைக் காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதிக்கு வரும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாளை (21) முதல் காலி முகத்திடலில் விசேட “பொதுமக்கள் உதவி சேவை நிலையம்” ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டுப் பங்களிப்புடன் இயங்கும் இந்த நிலையத்தின் ஊடாக, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான முழுமையான பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையம் பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் பிரதான நிலையமாகச் செயற்படுவதுடன், அவசர நிலைமை அல்லது எதிர்பாராத சம்பவங்களின் போது உடனடி உதவிகளை வழங்கவும், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நிலவும் சூழலைக் கண்காணித்தல் மற்றும் ஏதேனும் அவசர நிலைமைக்கு உடனடியாக பதிலளித்தல் ஆகியவை இதன் அடிப்படை நோக்கமாகும்.
பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு மேலதிகமாக, அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் முதலுதவி வழங்குவதற்காக அம்புலன்ஸ் சேவைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் குறித்த வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வசதிக்காக அவசர ஒருங்கிணைப்பு, நோயாளர் காவு வண்டி சேவைகள் மற்றும் பொலிஸ் உதவியைப் பெற்றுக்கொள்ள 0718595880 என்ற தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த முடியும்.






