பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய (நிரம்பி வழிய) ஆரம்பித்துள்ளதாக மஹாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரந்தெம்பே நீர்த்தேக்கத்திலிருந்து மினிப்பே அணைக்கட்டு ஊடாக மஹாவலி ஆற்றிற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, பெய்துவரும் மழைவீழ்ச்சியின் அளவிற்கு ஏற்ப அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் லொக்கல்ஓயா, தியபானாஓயா, ஹேபொலம்பயஓயா மற்றும் உல்ஹிட்டிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் ஊடாக வெளியேறும் நீரும், பதுலு ஓயாவின் நீர் கொள்ளளவும் நேரடியாக மஹாவலி ஆற்றில் கலப்பதனால், மஹாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும். எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், கலாவெவ ஆற்றுப்படுகைக்கு சொந்தமான கலாவெவ மற்றும் கன்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருவதால், போவதென்ன, இப்பாகட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, வரும் நாட்களில் அந்த நீர்த்தேக்கங்களும் வான் பாயக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு மஹாவலி அதிகாரசபை, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் மாதூறு ஓயா நீர்த்தேக்கமும் அதன் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியுள்ளதால், அந்த நீர்த்தேக்கமும் வரும் நாட்களில் வான் பாயக்கூடும் என மஹாவலி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.






