தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறித்த இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
பிரதேச கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்த பின்னர், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைக்கும் சம்பவங்கள், முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்றும் கலாநிதி வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று (08) மாலை 4 மணிக்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் (அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, 1ஆம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 19 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஓரளவிற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்கள் அங்கேயே தங்கியிருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இல்லாவிடின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் என்றும் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.






