இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசியை தமது அவசர பயன்பாட்டு பட்டியலில் இணைத்து உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துக்காகப் பாரத் பயோடெக் நிறுவனம் பல மாதங்களாகக் காத்திருந்தது.
கோவெக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்த உலக சுகாதார ஸ்தாபனம், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் குறித்த தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பான தரவுகளை கோரிவந்தது.
இதன்படி, பாரத் பயோடெக் நிறுவனமும் மேலதிக தரவுகளை அளித்து வந்தநிலையில், இன்றைய தினம் கூடிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான ஆலோசனைக் குழு கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்கு வார இடைவெளியில் கோவெக்ஸினின் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு பரிந்துரைத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான ஆலோசனைக் குழு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இதனைப் பரிந்துரைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.