தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
அதன்படி, அவர்கள் இந்நாட்டிற்கு அனுப்பும் பொருள் நன்கொடைகளை அனைத்து விதமான தீர்வை வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி (Import Taxes and levies) விரைவாக விடுவித்து, விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மிகவும் இலகுவான பொறிமுறையை அறிவித்துள்ளது.
நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை www.customs.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் வகைகள் குறித்த விரிவான விபரங்களை www.donate.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்தப் பொருள் உதவியை எந்தவொரு போக்குவரத்து முறையையும் பயன்படுத்தி இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கப்படுவதோடு, அந்தப் பொருட்களுக்கு தீர்வை வரி மற்றும் கட்டணங்கள் இன்றி விடுவிப்பதற்கான வசதிகள் பெற வேண்டுமாயின் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
செயலாளர்,
பாதுகாப்பு அமைச்சு
அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)
வித்யா மாவத்தை, கொழும்பு 07
மேலும், இந்த பொருள் நன்கொடைகள் நாட்டில் உள்ள வேறொரு நபருக்கோ அல்லது அமைப்பிற்கோ அனுப்பப்படும்போது வரி விலக்கு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் நன்கொடையை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைக்க இணக்கம்
தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அது வழக்கமான விடுவிப்பு செயல்முறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.
www.customs.gov.lk இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது +94 70 475 2823 Hotline இலக்கம் ஊடாக அல்லது relief25@customs.gov.lk மின்னஞ்சல் மூலம் இது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் விடுவிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படுவதையும், நன்கொடையாளர்கள் நன்கொடை அளிக்க ஊக்குவிக்கப்படுவதையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.






