டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது.
இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்திலேயே நகருகின்றது.
இதனால் இதன் மையப்பகுதி நாளை காலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்துக்கு அண்மையாக கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்வு வேகம் குறைவாக உள்ளமையால் கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும்.
அதனால் நாளையும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இரவு 2.00 மணிவரை (29.11.2025) நீடிக்கும் வாய்ப்புள்ளது.
காற்றின் வேகமும் வடக்கு மாகாணத்தில் படிப்படியாக அதிகரிக்கும்.
ஆகவே வடக்கு மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம். வெள்ளநீர் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தினை உணர்ந்தால் முன்கூட்டியே உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது சிறந்தது.
அதேவேளை வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு கரையோரப்பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் செயற்பாடு இடம்பெறும். ஆகவே கரையோரப் பகுதி மக்கள் இது தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
கடந்த சில நாட்களாக இலங்கையைப் புரட்டிப் போட்ட, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணமான ‘டிட்வா’ புயல் நாளையுடன் இலங்கையை விட்டு நீங்குகிறது.






