அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் திங்கள் கிழமை(24) கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவற்றை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அங்கு அவர் பேசுகையில்,
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ( SLLRDC ) ஒரு முக்கியமான அரச நிறுவனம். குறிப்பாக, நாட்டில் வெள்ளக் கட்டுப்பாடு குறித்த விசேட அறிவுள்ள 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் அங்கு கடமையாற்றுகின்றனர்.
அந்தக் கூட்டுத்தாபனம் மூலம் நம் நாட்டில் வெள்ளக் கட்டுப்பாடு பற்றிய பல்வேறு திட்டங்களைத் தயாரித்து வருகிறார்கள்.
இன்றைய(24) பத்திரிகையிலும் அதுபற்றி வெளியாகியுள்ளது, நீர்ப்பாசனத் திணைக்களம் பல்வேறு பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள எச்சரிக்கை என்று கூறும்போது, நமக்கு நினைவுக்கு வரும் ஒரு விடயம் அக்குறணை நகரத்தின் வெள்ளப் பெருக்கு ஆகும்.
இது குறித்து இந்த பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசப்படுகின்றது.இந்த பகுதி ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் இங்கு என்னையும் குறை கூறியிருந்தனர்.
அப்பொழுது,நகர அபிவிருத்தி அதிகாரசபை சுமார் ஒரு வருட காலமாக என் பொறுப்பில் இருந்தபோது, நான் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
அப்பொழுது நாங்கள் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு பணிக்குழுவை (Task Force) அமைத்திருந்தோம். அந்தப் பணிக்குழு மூலம் உரிய முறையில் ஆய்வு செய்து, இதை விஞ்ஞானப்பூர்வமாகக் கண்டறிந்து, இதைத் தீர்த்து வைக்க திட்டமிட வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அது தொடர்பான அறிக்கைதான் இது. முன்மொழியப்பட்ட நீரியல்(Hydrolic)ஆய்வு மற்றும் மழைநீர் வடிகாண் வடிவமைப்பு, வெள்ளத் தணிப்புத் திட்ட வடிவமைப்பு (Design of Flood Mitigation Proposal for Akurana) ஆகியவை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தால் (SLRDC) மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய காணி அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும் சாத்தியவள அறிக்கையொன்றைதயாரிப்பதற்கு 23 மில்லியன் ரூபாய் கோரி உள்ளனர்.
எனவே, அந்த 23 மில்லியனை வழங்கும்படி நான் கடந்த அரசாங்கத்திடமும் கேட்டேன். இந்த அரசாங்கத்திலும் அமைச்சர் லால் காந்த தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இரண்டு மூன்று முறை நான் முன்மொழிந்துள்ளேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இது குறித்து வேறொரு மாற்றுத் திட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் செய்ய வேண்டும் என்ற ஒரு யோசனை இருந்தது. ஆனால்,எந்தவொரு விஞ்ஞானியும் இதை ஏற்றுக்கொள்வார்.அதுபற்றி அமைச்சரும் கூட இன்று காலையில் என்னிடம் சொன்னார்.
வெள்ளக் கட்டுப்பாடு குறித்து விசேஷ அறிவு இந்த இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம்தான் உள்ளது.
பிரஸ்தாப கூட்டுத்தாபனம் இந்தச் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால், இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் உமங் ஓயா, ஒவிஸ்ஸ ஓயா, பலபிட்டியா ஓயா, வஹகல ஓயா போன்ற பல ஆறுகள் வந்து ஒன்று சேர்ந்து பிங்கா ஓயாவுடன் மகாவலி கங்கையுடன் ஒன்றாக இணைகின்றன. இந்த பிங்கா ஓயாவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது உருவாகும் இந்த பாரிய பிரச்சினையால், கடந்த ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில், அக்குறணை நகரம் சுமார் ஏழு அல்லது எட்டு முறை நீரில் மூழ்கியுள்ளது.
எனவே, இது குறித்து நாங்கள் அடிக்கடி பேசினாலும் கூட, இந்தச் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து முடிக்க அந்த 23 மில்லியனை வழங்குமாறு அமைச்சரிடம் நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், இதைச் செய்வதன் மூலமாகவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாகத் தீர்மானிக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இந்த நகர அபிவிருத்தி அதிகாரசபை மீண்டும் மீண்டும் வந்து அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் உள்ளன என்று கூறுகின்றது. ஆனால், அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் குறித்து நான் இங்கு ஒரு கேள்வியைக் கேட்டபோது, ஒரு பெரிய பட்டியலையே கொடுத்தார்கள்.
அந்தப் பட்டியலில் உள்ள தேவையற்ற கட்டுமானங்களை அகற்ற வழக்குத் தொடரச் சொன்னபோதிலும், இன்னும் வழக்குத் தொடரப்படவில்லை. இது குறித்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபை குறித்தும் நான் மூன்று முறை எங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளேன்.
ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.
அக்குறணை பிரதேச சபையில் அந்தக் காலங்களில் ஏதாவது ஊழல்கள் நடந்திருந்தால், அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அது குறித்துத் தகவல் திரட்ட வேண்டும் என்று சொல்லுங்கள். முன்னாள் அமைச்சர்களான எங்களுக்கு நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி சொல்லாமல், அடிக்கடி குறை கூறிக் கொண்டு, இதற்கு எதுவும் செய்யாமல் இருப்பது குறித்து எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.
அமைச்சர் புதிதாகப் பொறுப்பேற்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு பிரதி அமைச்சரின் பதில்:
அக்குறணை வெள்ளப் பிரச்சினை, இந்த வெள்ளப் பிரச்சினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் (DCC)எப்போதும் விவாதிக்கப்பட்டு
வருகிறது, அதன் தலைவராக அமைச்சர் லால் காந்த இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த அறிக்கையின்படி, உரிய திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.






