தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (17) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையை பேணுவதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு ஆதரவு வழங்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
இதேவேளை, விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டார்.






