2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்கை வழங்கினர்.
இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி கலந்துக்கொள்ளவில்லை.
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2வது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைத்தார்.
அதன்பின்னர் இன்றைய தினம் வரையில் அது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டதுடன் சற்றுமுன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






