ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யுனைட்டட் ட்ரவல்ஸ் & ஹொலிடேஸ் தனியார் லிமிட்டட் சார்பாக சட்டத்தரணி எஸ்.டப்ளியூ. அமில குமாரவினால் கடந்த 3ஆம் திகதி திங்கட்கிழமை இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் முகவர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் யுனைட்டட் ட்ரவல்ஸ் ரூ ஹொலிடேஸ் தனியார் லிமிட்டடினை பங்கேற்க அனுமதிக்குமாறு ஹஜ் குழுவிற்கு உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேற்படி நிறுவனத்திற்கு நேர்முகப் பரீட்சை நடத்தி முடிவினை அறிவிக்கும் வரை ஹஜ் குழுவின் 2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பணிகளை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் வேண்டப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் உறுப்பினர்கள், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் முறைப்பாடுகளை விசாரணை செய்த குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் மற்றும் 2026ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர் நிறுவனங்கள் என 106 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹஜ் முகவர் தெரிவு நேர்முகப் பரீட்சைக்காக யுனைட்டட் ட்ரவல்ஸ் ரூ ஹொலிடேஸ் தனியார் லிமிட்டடினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை எதிராக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.எம். லரீபினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடனான விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை கடந்த 5ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிப்தி அலி






