மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான விதிகளை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுங்கச் சட்டத்தின் 22வது பிரிவின் கீழ் ஒவ்வொரு உரிமதாரரும் குறித்த தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னரோ வரியைச் செலுத்த வேண்டும் என குறித்த வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய முழு வரியையோ அல்லது கட்டணத்தையோ செலுத்தத் தவறும் உரிமதாரரின் போத்தல் நிரப்பும் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இது ஒரு புதிய சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்கு மேலாக செலுத்த வேண்டிய முழு வரியையோ அல்லது கட்டணத்தையோ செலுத்தாமல் இருந்தால், அந்த உரிமதாரரின் அனைத்து உரிமங்களும் இடைநிறுத்தப்படும் என புதிய வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உரிமங்களை இடைநிறுத்துவதற்கான காலம் 6 மாதங்களாக இருந்தது, தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அது 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுவரி செலுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய வரி செலுத்தும் காலக்கெடு திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது






