வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு, வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
அதன்படி, வெள்ளம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி செய்தி மூலம் கிடைத்த தகவலின் பேரில், அங்கு பொலிஸாரினால் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அது பழைய கைக்குண்டு என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அது அந்த வீட்டிற்கு முன் வந்த விதம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் அதிகாரிகள் வந்து அதனை பரிசோதித்து, செயலிழக்கச் செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெள்ளம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வெள்ளம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






