களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள, மதுராவல, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியிலுள்ள தாழ்நிலப் பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குடா கங்கை, மகுர கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகள் ஊடாக செல்லும் குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இந் நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






