பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள மற்றும் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்பார் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்ட விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன. தொலைபேசி உரையாடல்கள் குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளார்கள். கொலையாளிகள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இதேவேளை உயிரச்சுறுத்தல் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய புலனாய்வு அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெகுவிரைவில் சபைக்கு சமர்ப்பிப்பார்.அவ்வாறான அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அத்துடன் பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள மற்றும் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர் விவரங்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபைக்கு விரைவில் சமர்ப்பிப்பார் என்றார்.






