பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது.