தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று (21) காலை திறக்கப்பட்டுள்ளன.
குறித்த வான் கதவுகளில் இருந்து வெளியேறும் நீர், மீ ஓயாவில் சங்கமிக்கின்றது.
இதன்படி, தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் ஒரு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெதுறு ஓயா நீர்த் தேக்கத்தின் 4 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 2 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 16,900 கன அளவு நீர் வெளியேற்ளப்படுவதாகவும் நீர்பாசன திணைக்களத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வாரியாபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபய்கேன, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்னாயகபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளில் இருந்து வினாடிக்கு 6,832 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளில் இருந்து வினாடிக்கு 2,898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், அந்த பகுதிகள் ஊடாக போக்குவரத்து செய்யும் வாகன சாரதிகள் கவனமாக இருக்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.






