பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக, நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் டேனியல் வெற்றோரியைப் பிரதியிடுவதில் இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் முன்னிலையிலுள்ளார்.
குறித்த தகவலை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பங்களாதேஷுடன் சீராக வெற்றோரி இணைய முடியாத நிலையில் பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சாய்ராஜ் பதுகுலே, பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீட் அஜ்மல் ஆகியோரே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பட்டியலிலுள்ள மற்றைய இரண்டு போட்டியாளர்களென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.