முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியராச்சி நேற்றைய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக, வருமானத்திற்கு அதிகமாக 28 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் விசாரணை தொடர்பாக நெவில் வன்னியாராச்சியிடம் தகவல் கோரப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து தகவல்களை வழங்கத் தவறிவிட்டார் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் நெவில் வன்னியாராச்சி சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் சொத்து தொடர்பில், விரைவில் நாட்களில் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிவான் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை நெவில் வன்னியராச்சி வழங்கவில்லை என்றும், எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணையிலிருந்து பலமுறை தப்பித்து வந்ததாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, சந்தேக நபரான நெவில் வன்னியராச்சிக்கு வலஸ்முல்லவில் 3.7 ஏக்கர் நிலம், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பல்லேகலையில் ரூபா 4.5 மில்லியன் மதிப்புள்ள ஒரு வீடும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அது மாத்திரமன்றி, மஹரகம, நாவின்னவில் 125 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடும், தெமட்டகொடயில் 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடும் உள்ளது. சந்தேக நபர் திஸ்ஸமஹாராமவில் 45.5 பேர்ச்சஸில் ஒரு விடுதியைக் கட்டி வருவதுடன் 10 பேருந்துகள், 8 பாரஊர்திகளும், 32 வங்கிகளிலும், 47 நிதி நிறுவனங்களிலும், வைப்புகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.