ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) முற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் டனாகா அகிஹிகோவை சந்தித்து கலந்துரையாடினார்.
தேசிய அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஜைகா ஊடாக சலுகை யென் கடன் மீண்டும் வழங்க ஆரம்பித்து, ஜப்பான் இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி இங்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தின் பிரதான காரணியாக தனியார் துறை, தொழிநுட்ப மற்றும் விவசாயத் துறை ஆகிய துறைகளின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை ஜைகா தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய திட்டத்தை விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கையின் மெக்ரோ பொருளாதார முகாமைத்துவத்தை கண்காணித்து இலங்கையுடனான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஜப்பான் – இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக பால் உற்பத்தித் துறையின் செயற்திறனை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் பிரதான ஒப்பந்தத்தில் இதன்போது கைச்சாத்திடப்பட்டது