2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நான் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, சீன அரசாங்கம் கடன் உதவியுடன் தொடங்கிய திட்டங்களை மீண்டும் தொடங்க எங்களுக்கு உதவுமாறு சீன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.
அவர் விசேட கவனம் செலுத்தி, தடைபட்ட அனைத்து திட்டங்களையும் தொடங்க சீன அரசாங்கத்திடமிருந்து தேவையான உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
அதேபோல், இந்த அதிவேக வீதி பகுதிக்காக விசேட சலுகை கடன் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதன்படி, டொலர்களில் விசேட கடன் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அதை யுவானில் செலுத்தலாம் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார். அதன்படி, சீன எக்ஸிம் வங்கி 2.5% – 3.5% வட்டி வீதத்தில் இந்தக் கடனை எங்களுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு நன்றி.”