தனக்கு ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்த கோட்டாபய இன்று ஞானசார தேரரை ஒரு நாடு, ஒரு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக எப்படி நியமித்திருப்பார்?.
பிரச்சினை இதிலேயே உள்ளது. ஞானசார தேரரின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவியதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு மகிந்தவின் அரசாங்கம் தோல்வியடைந்தது.
சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியை விமர்சிக்க பொதுபல சேனாவை மேல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் நினைத்தது. அப்போது ஜேம்ஸ் பெக்கரின் கசினோ திட்டத்திற்கு எதிராக சம்பிக்க மற்றும் வீரவங்ச ஆகியோர் மகிந்தவின் அரசாங்கத்திற்குள் அதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்தனர்.
சம்பிக்க மற்றும் வீரவங்சவின் எலும்பை முறிக்க பொதுபல சேனாவை களத்திற்கு கொண்டு வர வேண்டும் என ராஜபக்சவினர் தீர்மானித்தனர். இதன் காரணமாக 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகிந்தவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த றிசார்ட் பதியூதீனின் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்து மகிந்த தோல்வியடைந்தார்.
பொதுபல சேனா காரணமாகவே றிசார்ட்டும், ஹக்கீமும் மகிந்த அரசாங்கத்தில் இருந்து விலகினர். 2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஊடகவியலாளர் எக்னேலிகொட கொலை வழக்கு விசாரணைகளுக்கு தடையேற்படுத்தியதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு மாத்திரமல்ல, ஞானசார தேரருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. தற்போதைய பிரதம நீதியரசரும், அன்றைய சட்டமா அதிபருமான ஜயந்த ஜயசூரிய , ஞானசார தேரருக்கு எதிராக வழக்குகளில் நேர்நிலையானார். அன்று அவர் சட்டமா அதிபர்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று ஞானசார தேரரை ஆறு ஆண்டுகள் சிறையில் தள்ளும் வழக்கை ஜயந்த ஜயசூரிய தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களமே தொடர்ந்தது. அவர் தற்போது நாட்டின் பிரதம நீதியரசர்.
ஞானசார தேரர், ஒரு நாடு – ஒரு சட்டத்தை உருவாக்கும் செயலணிக்குழுவின் தலைவர். ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை ஜனாதிபதி சிறிசேனவே வழங்கினார். தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், ஞானசார தேரரின் பொதுபல சேனாவின் ஆதரவை பெறலாம் என சிறிசேன எண்ணினார்.
எனினும் ஞானசார தேரர் விடுதலையாகி, மேற்கொண்ட பிரசாரங்களால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக மாத்திரமல்ல, ஜனாதிபதியாக பதவிக்கு வரவும் பலம் கிடைத்தது.
இந்த நிலையில், ராஜபக்சவினருக்கு மீண்டும் சவால் விடுக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வீரவங்ச, கம்மன்பில ஆகியோரின் வாய்களை மூட மீண்டும் ஞானசார தேரரை உச்சத்திற்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாவே ஒரு நாடு – ஒரு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் ஒரு நாடு – ஒரு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஞானசார தேருக்கு வழங்கியுள்ள அரசாங்கம், இறுதியாக எது எப்படி இருந்த போதிலும் ஞானசார தேரர் இறுதியில் குத்த போவது தன்மை என்று ராஜபக்சவினர் அறியாமல் இருப்பது ஆச்சரியமே.