நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர் முயற்சியின் பலனாக முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.
நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்மாடி கட்டிட நிர்மாணப்பணிகளை நிறைவு செய்வதற்கென இருபது மில்லியன் (இருநூறு இலட்சம்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18.1.2013 ஆம் திகதி தொடக்கம் நாவலப்பிட்டி ரயில் நிலைய களஞ்சியசாலைக் கட்டிடத் தொகுதியில் இயங்கி வந்த இந்த பாடசாலையை, பொருத்தமான இடத்தில் நிலையான ஆரம்ப பிரிவு கல்விக் கூடமொன்றாக இயங்கச் செய்யவென பொருத்தமான இடம் ஒன்றை பெற்றுக் கொள்வதில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தொடராக மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாக நாவலப்பிட்டி கொடமுதுன, கரஹன்துங்கல பிரதேசத்தில் ஏறத்தாழ இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட ரயில்வே காணி ஒன்றை வழங்குவதற்கு 15.8.2022 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதோடு, அரச காணிகள் பராமரிப்பு சட்டத்திற்கு அமைய மேற்படி பாடசாலையின் கட்டிட நிர்மாண பணியை ஆரம்பிப்பதற்கு காணி ஆணையாளர் நாயகத்தின் அனுமதியும் வழங்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச பாடசாலையின் நிர்மாண பணிக்காக அரசாங்கத்தால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
அதன் பிரகாரம், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டிட
நிர்மாணங்களுக்கான பொறியியல் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட காணியில் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் சாத்தியம் காணப்படுவதைக் கவனத்தில் கொண்டு,
வகுப்பு அறைகளுடனான மூன்று மாடி கட்டிடத்துக்கும் மொத்தமாக 227 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், பாடசாலையின் நலன் விரும்பிகளைக் கொண்ட ‘ஸபா நலன்புரி அமைப்பு” உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த உத்தேச கட்டிடத்துக்கான அத்திவாரமிடல் நடவடிக்கைகளையும், பூர்த்தி செய்து கீழ் மாடி வேலைகளுக்காக 2025 ஆண்டு மாகாண கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபா இருபது மில்லியன் ( இருநூறு இலட்சம்) நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும் குறித்த கட்டிட நிர்மாண பணியின் முதல் கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பூர்த்தி செய்து, புதிய கட்டிடத்தில் “அல்- ஸபா வித்தியாலயம்”என்ற பெயரில் பிரஸ்தாப பாடசாலையை இயங்க வைக்கவும், கல்வி அமைச்சு அனுமதித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த “ஆயிரம் தேசிய பாடசாலை பிரகடனம்” வேலை திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி புனித மேரி கல்லூரியும் உள்வாங்கப் பட்ட நிலையில் ,அங்குள்ள ஐந்தாம் ஆண்டு வரையிலான ஆரம்ப பிரிவு மாணவர்களை உள்ளடக்கியதாக நாவலப்பிட்டி ரயில்வே களஞ்சியசாலையில் அடிப்படை வசதிகள் எவையுமின்றி ஆரம்பிக்கப்பட்ட பாடாசாலையே, “அல்- ஸபா வித்தியாலயம் “என்றழைக்கப்படுகின்றது.
அத்துடன்,தற்போதைய அரசாங்கம்
“தேசிய பாடசாலை”என்ற நடைமுறையை இல்லாமல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .
(ஊடகப் பிரிவு)