இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்தார்.
பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக,இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற,சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி அவர்கள் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும்.
சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபிகளாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக முழு உலக மக்களுக்கும் அதேபோல் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்ப முடிந்தமை மகிழ்ச்சிக்குரியதுன அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், குலம் அல்லது இருப்பு நிலை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மரியாதை, கருணை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது மட்டுமே ஒரு சமுதாயம் செழிக்க முடியும் என்பதை நபிகள் நாயகம் நமக்குக் காட்டியுள்ளார்.
சமூக பிரச்சினைகளுக்கு சர்வதேசம் நிலைதன்மையான தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன.
அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை.
ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மேலும் சவால்கள் வரக்கூடும்.
ஆனால் ஒரே மக்களாக, ஒரே குடும்பமாக மற்றும் ஒரே நாடாக ஒன்றிணைவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன மத குல வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப அன்னார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற முடியும்.
அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றாக அணிதிரளுவோம் என தமது வாழ்த்திச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.