எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைக்கும் நஷ்டஈடு மீனவர்களுக்கான இழப்பீடு மற்றும் கரையோரப் பாதுகாப்பிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய ஏற்கனவே கிடைக்கப்பெற்ற நஷ்ட ஈட்டின் அளவு இதில் மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை, கடலோரப் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் தற்போது மீதமுள்ள பணத்தின் அளவு குறித்து விரிவான அறிக்கையைத் தம்மிடம் வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ரூபா 293 மில்லியன் தொகை மீன்பிடித் துறையினருக்கு இன்னமும் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதன்படி, மீனவர்களுக்காக பெறப்பட்ட தொகையை செலுத்தாதது குறித்து குழு அதிருப்தி தெரிவித்ததுடன், சில மீனவர்கள் வெளிநாடு சென்றிருந்ததாலும், உரிய இழப்பீட்டைப் பெற வேண்டிய நபர் முன்வராததாலும், இந்த இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.