பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில், சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் இருந்து குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கல்கிசையை சேர்ந்த 25 வயதான கிஹான் துலான் பெரேரா என்பவரே சம்பத்தில் உயிரிழந்தார்.
இதன்போது மற்றுமொரு இளைஞனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த இளைஞன் உள்ளிட்ட 09 பேர் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, முச்சக்கர வண்டியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கோஸ் மல்லி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.